வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் என்ற அழகிய எம் கிராமம்.
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் என்ற அழகிய எம் கிராமம்.

Posted on
  • ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016
  • by
  • in

  • ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது பழமொழி. அவ்வகையில் நந்தி ஆற்றினை நடுவினிலே தாங்கி அழகுறச் செழிக்கின்றது எம் கிராமம். 
    இலங்கையின் வடமாகாணதின் முல்லைத்தீவு மாவட்டத்திலே அமைந்துள்ளதே வட்டுவாகல் என்ற அழகிய எம் கிராமம் ஆகும்.  இது முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் முல்லை நகரத்திலிருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. வட்டுவாகலின் வடக்கில் இந்துமா சமுத்திரமும் தெற்கில் நந்தியாறும் மேற்கில் முள்ளிவாய்க்கால் கிராமத்தினையும் கிழக்கில் செல்வபுரம் கிராமத்தினையும் எல்லைகளாக கொண்டுள்ளது.  

    அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர் பிரிவின் நிர்வாகக் கட்டமைப்பின் ஆழுமையிலுள்ளது எம் கிராமம்.

    பெயர் வரக் காரணம்

    எம் கிராமத்தின் நடுவினிலே அழகுற நந்தியாறு பெருக்கெடுத்து கடலுடன் சங்கமிக்கின்றது. மாரிகாலத்தில் நந்தியாறு நிரம்பிவழிந்து வெள்ளம் பெருக்கெடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அந்நீரினை கடலுடன் சங்கமிக்க வைப்பதற்காக பெருங்கடலுக்கும் எமது ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள நிலப்பரப்பினை வெட்டி கடலையும் ஆற்றையும் இணைத்து வாய்க்கால் அமைக்கப்படும். இவ்வாறு ஆற்றினை வெட்டி வாய்க்கால் அமைக்கப்படுவதனால் சிறப்பான காரணப்பெயராக ''வெட்டுவாய்க்கால்'' எனும் பெயர் அமைந்தது.இப் பெயரே மருவி பின்னர் ''வட்டுவாகல்'' ஆக மாற்றம் பெற்றதாக எம் கிராமத்தின் முன்னோர்கள் கூறுகின்றார்கள்.

    இப்பொழுதும் ''வெட்டுவாய்க்கால்'' என்ற பெயரே அரசுசார்பான அனைத்து ஆவணங்களிலும் பாவிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

    ஆலயம்:

    வட்டுவாகலின் முத்தாக நந்தியாற்றங்கரையினிலே பாலத்திற்கு அணமையான முச்சந்தியின் அருகாமையில் அமைந்துள்ள திருத்தலமே வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயம் ஆகும். இப்பதியில் முழுமுதற் கடவுளராக  சப்த கன்னிமார்கள் வட்டுவாகல் கிராம மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிறப்பாக ஆகமம் சாரா முறையிலே இவ்வாலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசேடமாக அம்மனுக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு வழிபாட்டுப் பூசைகள் இடம்பெறுவதுடன், வருடாந்தம் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமித் திங்களன்று மிகவும் சிறப்பான முறையிலே பாரம்பரிய பண்பாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு கோலாகலமாக பொங்கல் நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.


    பாடசாலை
    எமது கிராமத்தின் பாடசாலையின் பெயர் மு/வெட்டுவாய்க்கால் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகும். இது  ஆரம்பக் கல்விக்கு உகந்த பாடசாலையாக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இங்கே தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரையான மாணவர்வளுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. எமது பாடசாலை முல்லை மாவட்டத்தின் மிகவும்  பழைய பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1917ம் ஆண்டு கட்டப்பட்டதாக பாடசாலைப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. வருகின்ற வருடம் எமது பாடசாலை நூற்றாண்டு  விழாவினைக் கொண்டாடத் தயாராகி வருகின்றது.



    விளையாட்டு
    எமது கிராமத்தின் விளையாட்டுக் கழகத்தின் பெயர் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் ஆகும்.  உதைபந்து கரப்பந்து வலைப்பந்து மற்றும் கிராமிய விளையாட்டுக்களான கிளித்தட்டு எல்லே ஏனைய விளையாட்டுக்களிலும் சிறந்த அணியினைக்கொண்டமைந்துள்ளது. இடப்பெயர்வுக்கு முன் மாவட்ட ரீதியில் மாவட்டச் செயலகத்தினால் நடத்தப்படும் உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகளில் எமது கிராம கழக அணி இறுதிப் போட்டிக்கு வருடாந்தம் திகுதிபெற்று பலதடவை கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும். 
    மீண்டும் எமது கிராம இளைஞர்கள் எமது கிராமத்தின் விளையாட்டினைச் சிறந்த நிலைக்குக் கொண்டுவரக் கடின உழைப்பினை வெளிப்படுத்த வேண்டும்.


    நன்றி படங்கள்:ஜெ.யுகிந்தன்
    வட்டுவாகல்