வட்டுவாகல்.கொம்: முகத்துவாரத்திற்குச் செல்ல வட்டுவாகலில் இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரிக்கை (வீடியோ)
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

முகத்துவாரத்திற்குச் செல்ல வட்டுவாகலில் இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரிக்கை (வீடியோ)

Posted on
  • வியாழன், 28 ஜூலை, 2016
  • by
  • in
  • முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு இருமருங்கிலும் இராணுவத்தினரினால் அமைக்கப்பட்டுள்ள முகாமை அகற்றி, முகத்துவாரத்திற்குச் செல்லும் பாதையை திறந்துவிடுமாறு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் 11 பேர் அடங்கிய குழுவினர் நேற்று முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்தறியும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர்  இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
    முள்ளிவாய்க்காலின் யுத்த மௌனிப்புடன் அங்கு வாழ்ந்த மக்களின் சொத்துக்கள், சுகங்கள் யாவும் இழக்கப்பட்ட நிலையில், மீள்குடியேற்றம் நடைபெற்று வடக்கில் ஏழு வருடங்கள் கடந்தும், நல்லாட்சி நடைமுறைக்கு வந்தும் முல்லைத்தீவு கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமலுள்ளது.
    யுத்தத்தினால் அனைத்து சொத்துக்களை இழந்த நிலையில், எந்தவிதமான நிவாரணங்களும் கிடைக்காத வட்டுவாகல் பகுதியிலுள்ள மீனவர்களின் ஜீவனோபாயத்தை பெரும்பான்மையின மீனவர்கள் மற்றும் இராணுவத்தினர் தடைவிதித்து வருகின்றனர்.
    முல்லைத்தீவு வட்டுவாகல் ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இறால் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது தொழில் இடையூறு செய்யும் முகமாக இராணுவத்தினர் வட்டுவாகல் பாலத்தின் இருமருங்கிலும் உள்ள பாதையை மறித்து இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதனால் காட்டு வழியினூடாக முகத்துவாரத்திற்கு சென்று மீன்பிடியில் ஈடுபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
    இதேவேளை, முல்லைத்தீவு வட்டுவாகல், செல்வபுரம், கோவில்குடியிருப்பு, மண்ணாங்குளம், கள்ளப்பாடு, தீர்த்தக்கரை ஆகிய இடங்களில் உள்ள ஆறுகளில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மீனவர் குறிப்பிட்டார்.
    தமிழ் மீனவர்களின் வள்ளங்கள், வலைகள் மேல் பெரும்பான்மை இனத்தவர்கள் தமது வலைகளைப் போடுவதனால் தமிழ் மீனவர்களின் வலைகள் அறுந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
    எனவே, இதனைக் கட்டுப்படுத்தி வட்டுவாகல் பாலத்திற்கு இரு மருங்கிலும் உள்ள பாதைகளை திறந்து தரவேண்டும் எனவும் இதற்கு அரச அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் வள உற்பத்தியில் அதிகூடிய இடத்தை வகிக்கும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கரநாட்டுக்கேணி, நாயாறு, வட்டுவாகல் ஆகிய கிரமங்களில் மக்கள் பூர்வீகமாக மீன்பிடித் திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் தமது தொழிலை செவ்வனே ஆற்றி வந்தனர்.
    35 வருடங்களுக்கு முன்னர், இராணுவத்தின் உதவியுடன் அங்கு வந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தமிழ் மீனவர்களை விரட்டி அடித்ததுடன் தொழிலையும் ஆக்கிரமித்துக்கொண்டனர்.
    மீள்குடியேற்றம் நடைபெற்ற 07 வருடங்களாகியும் அவர்களது பூர்வீக தொழிலை திருப்பி அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஆகவே அவர்களது தொழிலை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பது முல்லைத்தீவு வட்டுவாகல் மீனவர்களின் கோரிக்கையாகும்.

    நன்றி IBC