வட்டுவாகல் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கை மறுபடியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பில் நில அளவையாளர் பா.நவஜீவன் அவர்களின் 25.08.2016 இல் அறிவிப்புக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்ரொம்பர் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ள காணி அளவீடு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள பிரதேச மக்கள் அன்றைய தினம் போராட்டம் ஒன்றையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தகவல்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் உறுதிப்படுத்தினார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின்போது யுத்தக்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்கள் கொண்று குவிக்கப்பட்டதாக ஜ.நா சபை தெரிவிக்கும் முல்லைத்தீவு – மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெரும்பாலான காணிகள் ஸ்ரீலங்கா அரச படையினரால் தொடர்ந்தும் கையகப்படுத்து நிலையிலேயே காணப்படுகின்றன.
யுத்தம் முடிவுற்று 7 அரை ஆண்டுகள் கடந்தும் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி ஏற்கனவே ஆயிரக்கணக்கான காணிகள் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு – மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் முயற்சியில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு வட்டுவாகல் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பினால் கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகளை ஏற்கனவே முறியடித்திருந்தனர்.
எனினும் கடந்த மூன்றாம் திகதி குறித்த பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக காணி அளவீடு செய்யும் நடவடிக்கை நில அளவை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,வட்டுவாகல் பாலத்தை அண்மித்த இரண்டு பகுதிகளிலும் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இந்த நடவடிக்கையை தடுத்திருந்தனர்.
மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா, வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான அன்ரனி ஜெகநாதன், துரைராசா ரவிகரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனால் மீண்டும் கடற்படையினர் தமது தேவைக்காக குறித்த காணிகளை கையகப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 1 ஆம் திகதி காணி அளவீடு செய்வுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடற்படையினரின் இந்த முயற்சிக்கு தாம் ஒருபோது அனுமதிக்கப்போவதில்லை என சூழுரைத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் மக்களுடன் இணைந்து எதிர்வரும் 1 ஆம் திகதி வட்டுவாகல் பிரதேசத்தில் போராட்டம் ஒன்றில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்