வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் கடற்படை விஸ்தரிப்புக்கு எதிராகப் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு: முல்லை நகர மக்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் கடற்படை விஸ்தரிப்புக்கு எதிராகப் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு: முல்லை நகர மக்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு

Posted on
  • புதன், 3 ஆகஸ்ட், 2016
  • by
  • in
  • முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் கடற்படையினருக்கென 617 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பகுதியினை அளவீடு செய்வதற்கு நிலஅளவைத் திணைக்களம் முடிவெடுத்துள்ளதை அடுத்து வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்கின் காணி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 
    இன்று 03ந் திகதி தொடங்கும் இவ் நிலஅளவை 04ம், 05ந் திகதிகளிலும் நடைபெறவுள்ளதாக நிலஅளவைத் திணைக்களம் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.  போர் நிறைவு பெற்ற பின்னர் கடற்படையினர் கோத்தபாய படைத்தளம் என்ற பெயரில் வட்டுவாகலில் பெருமளவு காணியில் கடற்படைத் தளத்தினை அமைத்துள்ளனர்.
    இப்பகுதியில் காணியினை இழந்த மக்களுடன் இவ்வருட தொடகத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் கலந்துரையாடல் நடாத்தி கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் மாற்றுக் காணியினை அல்லது காணிக்கான இழப்பீட்டினை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டியிருந்தார்.
    மாற்றுக்காணியும் வேண்டாம். இழப்பீடும் வேண்டாம் எமது பூர்வீகக் காணியே வேண்டும். கடற்படையினர் எமது காணிகளை எங்களிடம் ஒப்படையுங்கள் எனத் தெரிவித்திருந்த நிலையில் கடற்படையினருக்கான காணி அளவீடு நாளைத் தொடங்கவுள்ள நிலையில் காணி உரிமையான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    குறித்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் முல்லைத்தீவை அண்டியுள்ள அனைத்துக் கிராம மக்களும் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட வட்டுவாகல் நபரினதும் வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் திரு ம.அன்ரனிஜெகநாதன் அவர்களினதும் செவ்வி இணைக்கப்பட்டுள்ளது


    Thanks: Sangamam News