வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமிலிருந்து இராணுவத்தை அகற்றல் தொடர்பில் அரசாங்க அதிபரிடத்தில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் விரைவில் அதற்கான இறுதி தீர்வு அறிவிக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால்–வட்டுவா கல் பகுதியில் கடற்படையின் வசமாக 617 ஏக்கர் காணி உள்ளது. அதில் சிங்கள மக்களுக்கு சொந்தமான 100 ஏக்கருக்கும் அதிகமான காணியும் அரசாங்கத்திற்கு சொந்தமான 70 ஏக்கருக்கும் மேற்பட்ட காணித்துண்டுகளும் உள்ளன.
யுத்தம் இடம்பெற்ற பின்னர் 5 வருடகாலமாக மக்களிடத்தில் அந்த காணித்துண்டுகள் ஒப்படைக்கப்படவோ அங்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்படவோ இல்லை. தொடர்ந்து அந்த காணியில் கடற்படையினர் நிலைகொள்ளச் செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இன்று வரையில் இந்த காணியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இது தொடர்பில் ஆராய அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அறிக்கை சமர்ப்பித்ததும் மக்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும். அதன் பின்னர் தேசிய பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு கடற்படையினை அகற்றுவதா இல்லையா என தீர்மானிக்கப்படும். மறுபுறம் ஸ்ரீதரன் எம்.பி ஒரு போலியான குற்றச்சாட்டினை இராணுவத்தினர் மீது சுமத்தியுள்ளார்.
கடந்த யுத்தகாலத்தின் போது இராணுவத்தினரால் மக்களுக்கு புற்றுநோய் பரவச் செய்வதற்கான ஊசிகள் ஏற்றப்பட்டதாக பொய்க்குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.ஆனால் வடக்கில் அவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. அவர் தனது அரசியல் இலாபத்திற்காக பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். அதனால் அவருக்கு பதிலளிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என்றே நான் கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார்.