முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலக கலாச்சார விழா 01.10.2016 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது
இந்நிகழ்வில் முல்லை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் வாயிலாக ஒவ்வொரு கிராமங்களும் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தது. அதற்கிணங்க வட்டுவாகல் கிராம மக்களும் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். எமது கிராமத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய பண்பாட்டு கலையான ''கரகம் எடுத்தல் கலை நிகழ்வு'' எமது கிராமத்துக் கலைஞர்களினால் வழங்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள கலை கலாச்சார விழுமியங்களை எடுத்து காட்டும் அம்சமாகவே இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிகழ்வின் போது எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தும் வகையில் முல்லைத்தீவு பிரதேசத்தில் காணப்படும் சிறப்புக் கலைகள் மற்றும் வரலாற்று சின்னங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் குறித்த கலாச்சார விழாவில் சிலம்போசை என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இறுவெட்டுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மற்றும் .பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன் ,சாந்தி சிறிஸ்கந்தராசா, செல்வம் அடைக்களநாதன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க, அதிபர் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.