போர் நிறைவுற்று நாட்டின் பல பாகங்களிலும் பல பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு விட்டன. இறுதி யுத்தத்தின் போது அகப்பட்ட மூன்று இலட்சம் மக்களைப் பாதுகாப்பாக அவர்களது உயிரைக் காப்பாற்ற உறுதுணையாக நின்ற வட்டுவாகல் பாலம் இன்றளவும் கவனிப்பாரற்றுக் கடக்கின்றமை பெரும் மன வேதனையை ஏற்படுத்துகின்றது.
முல்லைத்தீவு நகரினை கிளிநொச்சி, யாழ்பாணத்துடன் இணைக்கின்ற A35 பிரதான வீதியில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் புனரமைப்புக்கான அவசியமும் தேவையும் பல தடவைகள் பிரதேச மக்களாலும், ஊடகங்களாலும் வெளிக்கொணரப்பட்டுவிட்டது.
ஆனாலும் இப்புனருத்தானத்துக்குத் தேவையான எந்த நடவடிக்கைகளையோ நிதி ஒதுக்கீட்டையோ இதுவரை எந்த அரசாங்கமும் மேற்கொள்ளவில்லை.
புதிய
பாலத்தின் அத்தியவசியத் தேவை
இந்தப் பாலமானது காலஞ்சென்ற திரு சுந்தரலிங்கம் அவர்கள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1951 ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அன்றைய நிலையினைக் கருத்திற் கொண்டு கட்டப்பட்ட இப்பாலமானது வேகமானதும், தற்போதய நெருக்கடியான நிலையிற்கும் ஈடு கொடுக்குமா என்பதே இன்றைய மிக முக்கியமான கேள்வியாக எழுப்பப்படுகின்றது.
பாலம் கட்டப்பட்டு சுமார் 70 ஆண்டுகளின் பின்னர் அதிகரித்த மக்கள் தொகையினால் ஏற்பட்ட அதிகளவான வாகன பயன்பாட்டினதும், இன்றைய வேகமானதுமான
போக்குவரத்தை சமாளிக்கக்கூடிய திறனை இப் பாலம் கொண்டிருக்கவில்லை . மேலும் ஒரு வழிப் பயன்பாடாகவே இப்பாலத்தின் போக்குவரத்து அமைந்துள்ளது. அத்துடன் மாரி காலத்தில் நீர் நிறைந்து இப்பாலத்தினை நீர் மேவிப் பாய்கின்றது. நீர்மட்ட அதிகரிப்புக்கு ஏற்ப உயரமாக இப்பாலம் கட்டப்படவில்லை.
மேலதிக மருத்துவ வசதி
முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்களது மேலதிக மருத்துவ சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலேயே பெற்று வருகின்றனர். அவசர தேவைகளின் போதான அம்புலன்ஸ் போக்குவரத்திற்காக இப்பாலமூடான போக்ககுவரத்து தங்குதடையின்றி நிர்வகிக்கப்பட வேண்டும்.
எனவே இக்குறைபாடுகள் யாவும் பூர்த்தியாக்கப்பட வேண்டுமெனில் உயரமான இரு வழிப்பாதையமைப்புடனான அகன்ற புதிய பாலம் அமைக்கப்படுவதே அவசியமாகவும் மிகப்பொருத்தமாகவும் இருக்கும்.
நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள புதிய ஜனாதிபதியின் ஆட்சியிலாவது
இப்பாரிய பிரச்சனைக்கான தீர்வு கிடைக்குமா? அடுத்த மாரிகாலத்திற்கு முன்னர் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்ப்படுமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
S.கணேசமூர்த்தி
சமாதான நீதவான்
வட்டுவாகல்
முல்லைத்தீவு