இயற்கை அன்னையின் அரவணைப்பில் கம்பீரித்து நிற்கும் எம் கிராமத்தில் வட மாகாணத்தில் கிடைக்கும் சில அரிய ஆரோக்கியமான சுவைமிகு வளங்களும் கிடைக்கின்றன. குறிப்பபாக மட்டி அல்லைக்கிழங்கு நாவல், கரம்பை எனச் சிலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம். அல்லைக்கிழங்கானது 'வற்றாளங் கிழங்கை' ஒத்த ஒரு வகைக் கிழங்கு ஆகும். வற்றாளங் கிழங்கு இனிப்பாக இருக்கும். ஆனால் 'அல்லைக் கிழங்கு' இனிப்பாக இருக்காது. மணற்பாங்கான, வரண்ட உவர்நிலச் சிறுகாடுகளில் படர்ந்து வளர்ந்திருக்கும்.
அல்லைக்கிழங்கு பற்றியும் அதன் சுவை பற்றியும், அதனை எமது கிராம மக்கள் எவ்வாறு அறுவடை செய்து விரும்பி உண்டார்கள் என்பது பற்றியும் எமது கிராமத்தின் மூத்த எழுத்தாளர் திரு பொன் புத்திசிகாமணி அவர்கள் எழுதிய கட்டுரையினை இங்கு மீளத் தரவேற்றியுள்ளேன்.
அல்லைக்கிழங்கின் அடிமுடி உண்டவர் எந்தக் கல்லையும் பிரட்டுவாராம்!
இப்படி ஒரு பழமொழி எங்கள் ஊரில் உண்டு. எங்கள் ஊரில் விளையும் ஒருவகைக்கிழங்கு இனம்தான் இந்த அல்லை. இதுவும் ஊர் வளங்களில் ஒன்று.
பகிடியும் பயன்பாடும் ஊரில் வயல்வேலை முடிவுறும் காலத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் எப்போதும் இருப்பார்கள்.
பக்கத்து வீடு அண்டையவீடு என்று எல்லோரும் சேர்ந்து முன்னெடுக்கும் ஒரு பொழுது போக்குத்தான் இந்த அல்லைக்கிழங்கு கிண்டப்போவது. ஒதியடிவயல் ,பாலையடி வயல்களுக்கு மேலாகக் காணப்படும் விடத்தல் காட்டில்தான் அல்லைக் கொடிகள் அதிகம் விளைந்திருக்கும்.
முதல் நாளே எல்லோரும் சேர்ந்து கதைத்து அவரவருக்குப் பிடித்த சாப்பாடுகளும் கட்டிக்கொண்டு போவார்கள்.
விடத்தல் மரம் கூரிய முட்களைக் கொண்டது. இதனைச்சுற்றியே அல்லைக் கொடி படர்ந்திருக்கும்.இதற்கு விடத்தல் மரமே கொழுகொம்பாகும்.
அம்மா, அக்கா, நான், தம்பி, கண்ணகையக்கா ,குட்டிநாகம்மாக்கா, தெய்வானை மாமி, தங்கராசா என்று எல்லோரும் சேர்ந்து போவோம்.
காலை பத்து மணியளவில் போனால் மாலைதான் வீடு திரும்புவோம்.
கிழங்கு கிண்ட அலவாங்கு, பற்றையை வெட்ட கைக்கத்தி, இவைதான் ஆயுதங்கள்.
விடத்தல் காடு களிமண் நிறைந்த கடார் நிலம். அலவாங்கில்லையேல் கிண்டமுடியாது. இலகுவானதும் அல்ல. கொடியைக் கண்டு பிடித்து அதன் அருகில் குந்தி இருந்து குத்திக் குத்திக் கிண்டிக்கொண்டுபோக கிழங்கு வரும். கிழங்கு இருக்கும் இடத்தைத் துப்பரவாக்கவேண்டும் இல்லையேல் முட்கள் பின்பக்கத்தைப் பதம் பார்க்கும். விடத்தல் காடு அவ்வளவு பெரியதல்ல பார்த்தால் பெரிய வனாந்தரம் போலத் தெரியும்.
கிழக்குப்பக்கம் வயல்வெளியும், மேற்குப்பக்கம் கைவிடப்பட்ட கரைச்சி வயல்வெளியும், அதற்கப்பால் நந்திக்கடற்கரையும் உண்டு. இந்த சின்னக்காட்டிற்குள் விளாத்திமரங்கள் நிறையக்காய்ச்சு பழுத்து விழுந்து தேடுவார் அற்றுப்போய்க்கிடக்கும். வாசனை மூக்கைத் துளைக்கும். இப்படியான சந்தர்ப்பங்களில் பொறுக்கிக்கொண்டு வருவோம்.
மாடுகள் போய் வந்த அதர்தான் நாம் செல்லும் பாதையாயிருக்கும். தவிட்டா, கொவ்வை, தூதுவளை, கரம்பையென்று பிடுங்கி வாயில் போட்டபடிதான் சிறு முட்காடுகளுக்கிடையே செல்வோம்.
இயற்கை எமக்களித்த செல்வம் இவைகள். மதிய இடைவேளையில் நல்ல நிழல் தரும் வேப்பமரத்தடியில் இருந்து சாப்பிடுவோம். எல்லோரும் கொண்டு வந்த உணவைப் பங்கு போட்டு உண்டு மகிழ்வோம். கடைசியாக மாசிக்கருவாடு போட்டு வைத்த உருளைக்கிழங்குக் குழம்பு இன்றும் நினைக்கும் தோறும் வாயில் எச்சில் சுரக்கவைக்கிறது . அந்த மரம், அம்மா, கண்ணகையக்கா யாருமே இன்று இல்லை .கண்ணகையக்கா கொண்டு வரும் கோதம்ப மா றொட்டி என்ன சுவை.தேங்காயும் சக்கரையும் போட்டு சுட்டுக் கொண்டு வருவா.அந்த நினைவுகளை மனம் இப்போதும் அசைபோடுகிறது.
பிடுங்கிய அல்லைக்கிழங்கை துண்டு துண்டாக வெட்டி அன்று பின்னேரமே அவித்து வாழை இலையில் பரப்பி . ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சாப்பிடுவோம். சாப்பிடும்போது தோலை உரிக்க வேண்டும். அதன் சுவை தனியானது எந்தக் கிழங்கிலும் இல்லாதது. நாக்குப் பிரட்டிச் சாப்பிடமுடியாமல் களிமாதிரி இருக்கும்.கிழங்கின் தோல் கறுப்பாக இருக்கும். அதற்கும் உரோமம் இருக்கும். அப்படியே சாப்பிட்டால் நாவில் அரிப்பேற்படும்.அவித்தபின் உரிச்சுச் சாப்பிடலாம். சின்னதாக இனிப்பு. அதிக சக்தி வாய்ந்தது. நார்ச்சத்து அதிகம் நிறைந்த இயற்கையின் வரப்பிரசாதம், இது.
நம்ம ஊர் முன்னோர்களின் வைரம் பாய்ந்த தேகத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று அம்மா சொல்லுவார்.
இந்தக்கிழங்கு வகை ,நெடுந்தீவில் இருப்பதாக எனது நண்பன் அறுவை லோகநாதன் சொல்லி பெருமைப்பட்டான். பெருமைப்பட வேண்டிய உணவுதான் இது.
ஊருக்குப் போன போது அக்காவிடம் விடத்தல் காட்டையும், அல்லைக்கிழங்கு பற்றியும் விசாரித்தேன். காடுவளர்ந்து நெருங்க முடியாதையா. எனக்கு ஆர்வம் இருந்தது. அக்கா விடவில்லை. அதற்குரியவர்கள் ஒவ்வொன்றாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அல்லையும் இப்போது இருக்கோ யாரறிவார். இதைப்போன்ற எத்தனை இயற்கை உணவுகள், இருக்கோ இன்று இல்லையோ யாருக்குத்தெரியும்?
எங்கள் வீட்டு வேலி ஓரம் அம்மா நாட்டி வைத்த அல்லைக்கொடிகள் இப்போதும் நிற்பதாகவும், தான் கிழங்கு பிடுங்கியதாகவும் அக்கா சொன்னார். சந்தோசம்.
பலருக்கு இதுபற்றி தெரியுமோ தெரியாது. நாம் அனுபவித்த இந்த இன்பத்தை இனிவருபவர்கள் அனுபவிப்பார்களோ யாரறிவார்.
நன்றி.
பொன்.புத்திசிகாமணி யேர்மனி.2018.
0 Comments :
கருத்துரையிடுக