வட்டுவாகல்.கொம்: தமிழ் சைவ பக்திப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், பௌத்தமதக் காப்புரைகளா? : திரு ரவிகரன் காட்டம்
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

தமிழ் சைவ பக்திப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், பௌத்தமதக் காப்புரைகளா? : திரு ரவிகரன் காட்டம்

Posted on
  • வெள்ளி, 26 பிப்ரவரி, 2021
  • by
  • in
  • Tags
  • தமிழ் சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும்  ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தனது மக்கள் தொடர்பகத்தில் 25.02நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ரவிகரன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

    வட்டுவாகல் ஒரு தனித் தமிழ் சைவக் கிராமமாகும். இந்த கிராமத்தில் தற்போது சத்தமில்லாதவகையில் பல வழிகளிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேலோங்கிவருகின்றன.

    அந்த வகையில் அங்கு கோத்தபாய கடற்படைத் தளம் என்னும் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டுவாகல் அக்கரையில், வடக்காறுப் பகுதிக்கு எவரும் மீன்பிடிச் செயற்பாட்டிற்குச் செல்ல முடியாதவாறு 670ஏக்கர், 03றூட், 10பேச் காணியினை கடற்படையினர் அபகரித்துள்ளனர்.

    இதுதவிர வட்டுவாகல் இக்கரையிலும் வடக்காறுப் பக்கமாக கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்து அங்கு இராணுவமுகாம் அமைக்கப்பட்டதோடு மாத்திரமின்றி, பாரிய பௌத்த விகாரையும் அங்கு அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

    அத்தோடு நந்திக்கடலும், நந்திக்கடலோடு சேர்ந்த வயல்நிலங்கள், நிலப்பகுதிகளை உள்ளடக்கி வனஜீவராசிகள் திணைக்களம் ஏறத்தாள 10250ஏக்கர், அதாவது 4141.67ஹெக்டயர் நிலத்தினை தங்களுடைய ஆளுகைக்குள் கெண்டுவந்திருக்கின்றார்கள்.

    இந்தவகையில் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என அரச இயந்திரங்கள் வட்டுவாகல் பகுதியில் தமது ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

    அதேவேளை இப்பகுதி பகுதிமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்தில், சிங்கள பௌத்த குடும்பங்களே இல்லாத இந்த வட்டுவாகல் கிராமத்தில் பௌத்த விகாரை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது.

    இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையில் பௌத்த மத காப்புரைகள் காலையும் மாலையும் வட்டுவாகல் கிராமம் பூராகவும் ஒலிபெரிக்கியூடாக ஒலிபரப்பப்படுகின்றது. அதாவது பௌத்த மதக் காப்புரைகள் அங்கு ஆக்கிரமிப்பு உரைகளாக அங்கு ஒலிக்கவிடப்படுகின்றன.
    ஒரு தனித் தமிழ் சைவக் கிராமத்தில் இப்படியானதொரு பௌத்த மத ஆக்கிரமிப்பு இடம்பெறுவதுடன் கடற்படை, இராணுவம் வனஜீவராசிகள் என்பவற்றாலும் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுவருவதால், வட்டுவாகல் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் கூனிக் குறுகிப்போய் இருக்கக்கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது.

    நாளாந்தம் சைவ இறைஇசைப் பாடல்கள் ஒலித்துவந்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மத காப்புரைகள் ஆக்கிரமித்துள்ளன - என்றார்