வட்டுவாகல்.கொம்: வட்டுவாகல் மக்களின் போராட்டத்தால் மழுங்கிய துப்பாக்கி முனை: கைவிடப்பட்ட காணி அபகரிப்பு
வட்டுவாகல் மக்களின் இணைய இணைப்பு..

வட்டுவாகல் மக்களின் போராட்டத்தால் மழுங்கிய துப்பாக்கி முனை: கைவிடப்பட்ட காணி அபகரிப்பு

Posted on
  • வியாழன், 29 ஜூலை, 2021
  • by
  • in
  • Tags
  •  


    "துப்பாக்கி முனையில் எமது வட்டுவாகல் கிராம மக்களுக்கு உரித்தான காணிகளை கையகப்படுத்த அரச தரப்பு மேற்கொண்ட பெரு முயற்சி வட்டுவாகல் மக்களின் போராட்டத்தால் இன்று தடுக்கப்பட்டது "

    முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால்கிழக்கு, வட்டுவாகல்பகுதியில் தமிழ்மக்களின் காணிகளை கோத்தாபாய கடற்படைத்தளம் அபகரித்துள்ள நிலையில், 29.07.2021 இன்று குறித்த காணிகள் கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றிருந்தது.
    கோத்தாபாய கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும் என்பது தொடர்பிலே கடந்தகாலங்களிலும் பலதடவைகள் மாகாணசபை அமர்வுகளிலும், மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது
    இதுதவிர பலதடவைகள் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். குறிப்பாக கடந்த 22.02.2018ஆம் திகதியன்றும் இந்த கடற்படைமுகாம் அகற்றப்படவேண்டும் எனத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்
    இதிலே கோத்தாபாய கடற்படை முகாம் அபகரித்துள்ள காணிகளிலே, 379ஏக்கர் காணிகள் தனியார்காணிகளாக காணப்படுகின்றன. 291ஏக்கர் காணிகள் அரச கட்டளைச்சட்டத்தின்படி எமது தமிழ் மக்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட காணிகளாகக் காணப்படுகின்றன.
    இந்தக்காணிகளை மக்களுடைய சம்மதம் இல்லாமல் கடற்படை அபகரிப்பது பிழையான செயற்பாடாகும்.
    இங்கே காணிகள் மாத்திரமல்ல மக்களுடைய வாழ்வாதார வழிகளை பலவழிகளிலும் கடற்படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
    குறிப்பாக இந்த கடற்படைமுகாம் அரிச்சல்பாதை எனப்படுகின்ற ஒரு பிரதான வீதியை முடக்கிவைத்திருக்கின்றது. இந்த அரிச்சல்வீதிவழியே செல்லும்போது அங்கே எமது மீனவ மக்களுக்குரிய கரவலைப்பாடுகள், இறங்குதுறைகள் என்பவற்றுக்குச் செல்லலாம். தற்போது இவ்வாறு இராணுவமுகாம் அபகரித்திருப்பதால் அந்தமீனவமக்கள் இறங்குதுறைகளையோ, கரவலைப்பாடுகளையோ பயன்படுத்தமுடியாத நிலைகாணப்படுகின்றது.
    அத்தோடு வட்டுவாகல் அக்கரை என்று சொல்லப்படும் பகுதியில், குறிப்பாக தற்போது கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் நந்திக்கடலாற்றின் கரையோரமாக மீனவர்கள் வீச்சுத்தொழில் உள்ளிட்ட சிறுதொழில்கள் செய்வதற்கு கடற்படையினர் தடையாக உள்ளனர்.
    இப்படியாக எங்களுடைய மக்களின் வாழ்வாதாரம் அத்தனையையும் முடக்கி இந்த அரசானது கடற்படைத் தளத்திற்காக எங்களுடைய மக்களுக்குச் சொந்தமான இந்தக்காணிகளை அபகரித்து வைத்திருப்பதால் இந்த மக்களுடைய வாழ்வாதாரம் பொய்த்துப்போகின்றது.
    அத்தோடு தென்னிலங்கையைச் சேர்ந்த சேர்ந்த சீனப் பிரஜை ஒருவருக்கும் இங்கே 49 ஏக்கர் அளவில் காணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் காணியை கடற்படைக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார் இதற்கு நாம் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தோம். இவ்வாறாக அவர்கள் பலவழிகளிலும் எமது மக்களுடைய காணிகளை அபகரிக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
    வட்டுவாகல் பகுதியைப் பொறுத்தவரையில் 617 ஏக்கர் காணிகளில் கோத்தாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை மறுபக்கம், கிட்டத்தட்ட 400ஏக்கருக்குமேல் இராணுவத்தினர் அபகரித்து அங்கு பாரிய அளவில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறாக வட்டுவாகல் முழுவதும் படையினர் வசமாகின்றது. இதைத் தடுக்கவேண்டும் என்பதுதான் இப்பகுதிமக்களின் கோரிக்கையாகவுள்ளது.
    வட்டுவாகல்என்பது தமிழர்களின் பூர்வீக வாழ்விடமாகும், இவ்வாறாக தமிழர்களின் பூர்வீக வாழிடத்தை அபகரிப்புச்செய்து இராணுவத்தினர் பௌத்த விகாரைகளை அமைத்து, பௌத்தத்தைத் திணிக்கின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
    அந்தவகையில் தமது பூர்வீக காணிகளை அபகரித்திருக்கின்ற கடற்படையினர் வெளியேறவேண்டும் எனத் தெரிவித்தே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இவ்வாறான நிலையிலே இங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத்திணைக்கள அதிகாரி மற்றும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன் ஆகியோர் இந்த நிலஅளவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதெனவும், இதன்பின்னர் சம்பந்தப்பட்ட அனைவரையும் திரட்டி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட பின்னரே நிலஅளவீடுதொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் மக்களுக்கு வாக்குறுதியளித்துளார்.

    நிச்சயமாக இந்தவிடயத்திலே எமது மக்களுக்கு நிரந்தரமானதோர் தீர்வு வேண்டும். எனவே இந்தப் பகுதியில் எமது மக்களின் காணிகளை அபகரித்திருக்கின்ற கடற்படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும். எமது மக்களுக்குரிய காணிகள் எமதுமக்களிடமே கையளிக்கவேண்டும்
    'எமது நிலம் எமக்கு வேண்டும் எமது தேசமே எமக்கு உயிர்'